8ஆம் திகதி இரவு பரிஸ் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளரும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினருமான பரிதி என்று அழைக்கப்படும் நடராசா மதீந்திரனின் படுகொலையில் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் பிரான்ஸில் இயங்கும் பாம்புக்குழுவை சேர்ந்த பிறேம், மற்றும் ரமேஸ் என பரிஸ் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் ஒருவர் பரிஸ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து முதலில் பிறேம் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ரமேஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பரிஸில் இயங்கும் குழுகளில் பாம்புக்குழுவும் ஒன்று. இக்குழு பரிதியுடன் மிக நெருக்கமாக இருந்ததாகவும், தெரிவிக்கப்படுகிறது. பாம்புக்குழுவுக்கும் பரிதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது பாம்புக்குழுவிற்கு பணத்தை கொடுத்து இக்கொலையை நடத்தப்பட்டதா என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பரிஸில் பாம்புக்குழு, வெண்ணிலாகுழு, முக்காப்பாலாகுழு, மின்னல்குழு என 30க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை கப்பம், கொலை, கொள்ளை, வாள்வெட்டு என்பவற்றில் ஈடுபட்டு வருகின்றன. கூலிக்கு கொலை செய்யும் வேலைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
பரிஸில் இக்குழுக்களை வைத்தே பெரும்பாலான வன்முறைகள் நடத்தப்படுகின்றன. இக்கொலை தொடர்பாக இதுவரை 65பேர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். 90வீத விசாரணைகள் முடிந்துள்ளதாகவும் விரைவில் அரச வழக்கு தொடுநரிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை பரிதியின் கொலை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமை செயலகத்தை சேர்ந்த விநாயகம் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். விநாயகம் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக