சனி, 1 டிசம்பர், 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் கைது

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நான்கு பேர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது தாயர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு “வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் போகின்றோம் என்று கூறினார்.

அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் அழுதும் அவர்கள் கேட்கவில்லை அதனையும் மீறி, தர்ஷானந்தை அழைத்துச் சென்றுவிட்டனர். அவரை கைது செய்ததற்கான எந்தவிதமான ஆவணங்களையும் எமக்குப் பொலிஸார் வழங்கவில்லை.” என்று கண்ணீருடன் தர்ஷானந்தின் தாயார் தெரிவித்தார்.

எனினும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதனையும் பெற முடியவில்லை.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பதில் துணைவேந்தர் பேரா சிரியர் வேல்நம்பி தெரிவித்தார்.

கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் இருமாணவர்களின் பெயர் விவரங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், இரண்டு மாணவர்களையும் நான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். விசாரணைகளின் பின்னர் மாணவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என பொலிஸார் கூறினர் என்றும் மாணவர்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான க.ஜெனமேனன், விஞ்ஞானபீட மாணவனான எஸ்.சொலமன் ஆகிய இருவருமே கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

திருநெல்வேலிப் பகுதியில் நேற்றுமுன்தினம் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக