திங்கள், 17 டிசம்பர், 2012

ஜேவிபி, புலி போராட்டங்கள் இரண்டும் வெவ்வேறு என்பதை மாணவர்களுக்கு கூறுங்கள்: மனோ கணேசனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

தெற்கில் ஜேவிபியினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன என்பதை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.ஜேவிபி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜேவிபி இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. யுத்தம் முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில் புலிகள் இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு. புலிகளை நினைவு கூறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும், ஜேவிபியினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.மாண்டுபோனவர்கள நினைவுகூர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுங்கள். கடந்த காலங்களுக்கு நாட்டை மீண்டும் இந்த சம்பவங்கள் அழைத்து செல்வதை அனுமதிக்காதீர்கள். நாட்டின் முதன் குடிமகன் என்ற அடிப்படையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் நேரடி தலையீடு செய்யுங்கள் என மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததிற்கு பதிலளித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
து தொடர்பில் மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,
வேலைப்பளுவின் இடையில் இந்த மாணவர் விவகாரம் தொடர்பாக தனக்கு முழு விபரம் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபற்றி எவரும் முழுமையாக விபரம் தெரிவிக்கவும் இல்லை. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தற்சமயம் நாட்டில் இல்லை. அவர்தான் இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்புவார். அவர் வந்தவுடன் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எனினும், மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்சமயம் பல்கலைக்கழக விவகாரமாக இல்லாமல் பாதுகாப்பு அமைச்சு விவகாரமாக மாறியுள்ளதாக நான் சுட்டிகாட்டினேன். அதை ஏற்றுகொண்ட ஜனாதிபதி, எனினும் இதை பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான அமைச்சரின் மூலமே தான் அணுக விரும்புவதாக சொன்னார். இந்த சம்பவங்கள் இனப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன என ஜனாதிபதி கூறினார். அத்தகைய நோக்கம் எனக்கு கிடையாது என்பதாலேயே இதை நான் நேரடியாக உங்களிடம் கூறுகிறேன் என நான் தெரிவித்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வை தனது ஆட்சி காலத்தில் காணுவதை தான் பெரிதும் விரும்புவதாக ஜனாதிபதி கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக