44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.35க்கு இருந்த சுப நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில்,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'இன்று நீதிமன்றம் ஒரு மரண வீடாகியது' மெழுகுவர்த்திகளை ஏற்றி சட்டத்தரணிகள் அமைதிப் போராட்டம்
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்கு முன் சற்றுமுன் கூடிய சட்டத்தரணிகள் குழுவொன்று, 'இன்று நீதிமன்றம் ஒரு மரண வீடாகியது' எனக் கூறி மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட மேற்படி சட்டத்தரணிகள் குழுவை அங்கு விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸார் அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரமாக வாக்குவாதம் இடம்பெற்றது.
இதேவேளை, புதிய பிரதம நீதியரசருக்கு வாழ்த்து தெரிவித்து நீதிமன்ற வளாகத்துக்கு முன் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை அங்கிருந்து களைக்குமாறும் மேற்படி சட்டத்தரணிகள் குழுவினால் பொலிஸாரிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
அவர்களது வேண்டுகோளுக்கு பொலிஸார் செவிசாய்க்காத நிலையிலேயே, மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப் போராட்டத்தில் சட்டத்தரணிகள் ஈடுபட்டனர்.
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து ஷிராணி வெளியேறினார்
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, கொழும்பு விஜயராம வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
குறித்த இல்லத்திலிருந்த அவரது தனிப்பட்ட பொருட்கள் அனைத்தையும், கொழும்பு, றோயல் பார்க்கிலுள்ள தனது சொந்த வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக