சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தேச சட்டமானது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.பிடிவிராந்து இன்றி கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டமானது, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதனைத் தொடர்ந்து கைதுகள் தொடர்பான சட்டத்தில் தளர்வு ஏற்படுத்த வேண்டிய அரசாங்கம், சட்டங்களை கடுமையாக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்போரை ஒடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டமானது காவல்துறையினர் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்கள் மேலும் பாதக விளைவுகளை உண்டு பண்ணும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக