இந்த வார இறுதிக்குள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பதவி விலக்கப்படலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் எதிர்வரும் 11ம் திகதி பிரதம நீதியரசரை பதவி விலக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்றில் விவாதம் நடத்தி, வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் அந்த அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற அறிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி, பிரதம நீதியரசரை பதவி விலக்குவது தொடர்பான உத்தரவினை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பாரியளவில் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்குவதா இல்லை என்பது குறித்து தீர்மானிப்பதற்காக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாரம் அறங்கூறுநர்கள் சபையாக மாறவுள்ளனர்.
பிரதம நீதியரசரின் பதவி; தொடர்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாரம் அறங்கூறுநர்கள் சபையாக மாறவுள்ளனர்.
கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக இல்லை என்பதை தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்களின் இணக்கத்தின் அடிப்படையில் எதிர்வரும் 10 ஆம் அல்லது 11 ஆம் திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அதேவேளை விவாதத்திற்காக இரண்டு தினங்கள் வழங்கப்படுமா அல்லது எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரத்தை வழங்கி ஒரே நாளில் மாத்திரம் விவாதம் நடத்தி இறுதி தீர்மானம் அறிவிப்பதா என்பது பற்றி கலந்துரையாடப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இது குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 8 ஆம் திகதி அதாவது புதிய வருடத்தின் நாடாளுமன்றம் கூட்டப்படும் தினத்தில் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர்.
நாடாளுமன்றம் அறங்கூறுநர் சபையாக மாறி, நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்தி, பிரதம நீதியரசர் குற்றவாளியா, இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதன் போது, பிரதம நீதியரசர் குற்றவாளி அல்ல எனவும் அவர் பதவியில் இருந்து நீக்கப்படக் கூடாது எனவும் போதுமான பெருபான்மை பலத்துடன் விவாதத்தின் யோசனை நிறைவேற்றப்பட்டால், நம்பிக்கையில்லா தீர்மானம் இரத்துச் செய்யப்படும்.
எனினும் பெருபான்மை வாக்குகள் பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானித்தால், சபாநாயகர் இது பற்றி, ஜனாதிபதிக்கு அறிவிப்பார். இதன் பின்னர், ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து, பிரதம நீதியரசரை அந்த பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பார் எனவும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது இந்த தீர்மானத்தை அறிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக