புதன், 6 பிப்ரவரி, 2013

பழைய பல்லவி பாடும் அரசுக்கு 25ம் திகதிக்குப் பின் காத்திருக்கிறது

இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சைனக்கு அரசியல் தீர்வு காண்பதாக 2009 இலும், மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக 2012 இலும், ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கிய இரண்டு உறுதி மொழிகளையும் இன்று மீறிவிட்டது.

பழைய பல்லவி பாடும் அரசுக்கு 25ம் திகதிக்குப் பின் காத்திருக்கிறதுஇந்த உண்மையை வெறும் பொய்களால் திரையிட்டு மறைக்க முடியாது என்பதை இந்த மாதம் 25ம் திகதியிலிருந்து தொடங்கும் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு செல்லும் இலங்கை தூதுக்குழு தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணைக்குழு கடந்த 2012 மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பற்றி மட்டுமே இந்த அரசு பேசுகிறது. அதற்கு முன்னர் 2009 மே மாதத்திலும் ஒரு தீர்மானம் இலங்கை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டததை இந்த அரசு திட்டமிட்டு மறைக்கிறது. 2009 மே மாதத்திலும் ஒரு தீர்மானம் இலங்கை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டததை இந்த அரசு திட்டமிட்டு மறைக்கிறது.

2009 மே மாதம் நிறைவேறிய முதல் தீர்மானம் ஐநா செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தை அடுத்து இலங்கை அரசுடன் இணைந்து பான்கிமூன் வெளியிட்ட கூட்டு அறிக்கையை அடிப்படையாக கொண்டது. அந்த கூட்டு அறிக்கையில் 13 ம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் அபிவிருத்தி செய்வதாக ஐநா செயலாளருக்கு இலங்கை அரசாங்கம் உறுதி அளித்தது. எனவேதான் முதல் தீர்மானத்தில் அரசியல் தீர்வுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது.

இரண்டாம் தீர்மானம் கடந்த 2012 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை நிறைவேற்றுவதாக ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை அரசாங்கம் உறுதி அளித்தது. இந்த இரண்டாம் தீர்மானம் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே மிக அதிகம் கவனம் செலுத்தியது.

ஐநாவுக்கு அளிக்கப்பட்ட இந்த இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதுதான் இன்றைய உண்மை நிலைமை.

இந்நிலையில் அரசாங்கம் எதிர்கட்சிகள் மீது பழைய குற்றச்சாட்டை முன்வைக்க ஆரம்பித்து விட்டது. எதிரணியினர் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கொண்டு சென்று தருவதாக இவர்கள் இப்போது மீண்டும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது பழைய பல்லவி. நாம் ஒன்றும் உலகத்துக்கு எடுத்து சொல்ல வேண்டியது இல்லை. அரசாங்கத்தின் விசாவை பெற்று மூன்று அமெரிக்க பிரதிநிதிகள் கடந்த வாரம் இலங்கை வந்தார்கள். அவர்கள் தமக்கு வேண்டிய கருத்துகளையும், தகவல்களையும் எடுத்து சென்றார்கள். அரசாங்கம் உலகிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் இலட்சணத்தை நேரடியாக கண்டு சென்றார்கள். இந்நிலையில் எம்மை குற்றம் சாட்டுவதில் எந்த வித பிரயோஜனமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக