சனி, 2 பிப்ரவரி, 2013

ஜெனிவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை சாதாரண விடயமல்ல - திஸ்ஸ விதாரண

News Serviceஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாகக் கருத முடியாது. இதன் மூலம் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியம் உண்டு என அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.


இந்த நிலைமையை புலி ஆதரவு புலம்பெயர் மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்வர். எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்துக்கு வலியுறுத்திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற்கான ஒரே வழியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி பாராளுமன்றத் தெரிவுக்குழுவை கூட்டி அரசியல் தீர்வை விரைந்து காண்பதன் மூலமே இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடர் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக