திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஐ.நா. கூட்டத்தொடர் சற்றுமுன் ஆரம்பம்; கூட்டமைப்பு வியாழனன்று விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் இலங்கை நேரப்படி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகியதுசுவிர்ஸ்சலாந்தின் தலைநகரான ஜெனீவாவில் ஆரம்பமாகிய இந்த பேரவையின் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை இடம்பெறும்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கலந்து கொள்வதற்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக் தூதுக்குழு ஏற்கனவே ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளது.அதிகாரிகள் மட்டத்திலான குழுவினர் நேற்று பயணமாகியதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 21 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படும்.இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் அந்த கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு எதிர்வரும் 28 ஆம் வியாழக்கிழமை ஜெனிவா செல்லவிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இந்த குழுவில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் சொன்னார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன். எஸ். ஸ்ரீதரன். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் ஆகியோரே உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த குழுவினர் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு, படையினரின் ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடாவடித்தனம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல், விசாரணைகள் தொடர்பிலும் அறிக்கைகள் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உலகத் தமிழர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு லண்டனில் எதிர்வரும் புதன்கிழமை விழாவொன்று நடத்தப்படவிருக்கின்றது.அந்த விழாவில் கலந்துக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஆகிய இருவரும் லண்டனுக்கு சென்றுள்ளனர்.இவ்விருவரும் மனித உரிமை பேரவை கூட்டத்திலும் கலந்துக்கொள்வார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது எனினும் அந்தத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக