வலிகாமம் இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தில் இனம் தெரியாதோர் தாக்குதல் - மக்கள் திருப்பித் தாக்கினர்
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் தம்மை மீளக் குடியமர்த்துமாறு இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை குழப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. வலிகாமம் வடக்குப் பகுதி இடம்பெயர்ந்த மக்களின் அமைப்புக்கள் இன்று தெல்லிப்பளை ஆலையப் பகுதியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை காலை 8.30 மணியிளவில் ஆரம்பித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி, உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கூட்டணியினர் தமது ஆதரவைத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு எடுத்திருந்தனர். குறிப்பாக குடாநாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்களும் திரண்டு இருந்தனர். நீண்ட இடைவெளியின் பின் 600 முதல் 700 வரையில் பொதுமக்கள் திரண்ட ஒரு அடையாள உண்ணாவிரதப் போராட்டமாக இது விளங்கியது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இங்கு சமூகமளித்திருந்து ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க தனது ஆதரவைத் தெரிவித்து மக்கள் முன் உரையாற்றினார். உயர் பாதுகாப்பு வலையங்கள் என்பது இப்போது தேவையற்றது எனத் தெரிவித்த அவர் பலாலி விமான நிலையம் மற்றும் படைத்தளம் என்பவற்றின் பாதுகாப்பை பலப்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் நிலங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனத் தெரிவித்த அவர் இன்று யாழ்ப்பாணத்தில் மட்டும் அல்ல வன்னி கொழும்பு என நாடு பூராகவும் நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது எனத் தெரிவித்த அவர் இவை அனைத்தும் ராஜபக்ஸ பிரிகேட்ஸ்சால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், இவற்றை விடுவிக்க மக்கள் அனைவரும் பொது அணியின் கீழ் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும், மாவட்டங்கள் தோறும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மகிந்த பிரிகேட் வீட்டுக்கு விரட்டி அடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.விடுதலைப் புலிகளுடனான சமாதானக் காலத்தில் உயர் பாதுகாப்பு வலையத்தை கட்டுப்படுத்தி மக்களை அங்கு மீளக் குடியமர்த்த முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அங்கு தெரிவித்தார்.
ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் தனது உரையை முடித்துக் கொண்டு புறப்பட்ட பின் அடையாளம் தெரியாத 8 முதல் 9 பேர் வரை உட்புகுந்து குழப்பங்களை ஏற்படுத்த முனைந்தனர். மக்களைத் தாக்கி அவர்களை குழப்பி வெளியேற்ற முற்பட்டனர். அமைதியான முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட மக்கள் பதிலுக்கு தாக்க முற்பட்டனர். இந்த நிலையில் இனம் தெரியாத தாக்குதலாளிகள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தள்ளி விட்டதுடன் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்க முற்பட்டனர். ஊடகவியலாளர்களும் புகைப்படங்களை எடுத்து ஆவணப்படுத்த முயன்றதுடன் பொதுமக்களும் அடையாளம் தெரியாதோர் மீது தாக்க முற்பட்டனர். நூற்றுக்கணக்கான பொலிஸார் காவல் நிற்க நடந்த இந்த பரஸ்பர தாக்குதலில் அகப்பட்ட இனம் தெரியாத சிலரை பிடித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் கையளித்தனர். அவர்கள் அனைவரும் தப்பிச் சென்று படையினரின் வாகனங்னங்களில் ஏறிச் செல்வதனை பொதுமக்கள் பார்த்து நின்றனர். படை உயரதிகாரிகள் முகங்களை மறைத்து அவர்களை வழிநடத்தியதையும் பொதுமக்கள் அவதானித்தனர். எனினும் மக்களை உடனடியாக போராட்டத்திற்கு திரும்புமாறு கோரிய கட்சித் தலைவர்கள் உடனடியாகத் போராட்டத்தை தொடருமாறு கோரினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள் தாக்கப்பட்டதுடன் உதயன் பத்திரிகையாளரின் புகைப்படக் கருவியும் அடித்து நொருக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக