வியாழன், 7 பிப்ரவரி, 2013

தினக்குரல் எரிப்பு - விநியோகிஸ்த்தர் மீதான தாக்குதல் - ஊடகங்கள் மீதான நேரடி அடக்குமுறை

தினக்குரல் எரிப்பு - விநியோகிஸ்த்தர் மீதான தாக்குதல் - ஊடகங்கள் மீதான நேரடி அடக்குமுறை - SLTMAயாழ் தினக்குரல் நாளேடுகள் இனம்தெரியாத நபர்களினால் எரிக்கப்பட்டதுடன் நாளேடுகளை விநியோகிப்பவர் தாக்கப்பட்டமை ஊடகங்கள் மீதான நேரடியான அடக்குமுறை என ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் அருகில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விநியோகஸ்த்தர் இனம்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்டுமுள்ளார். அவரை வீதியால் சென்ற பொதுமக்கள் அருகில் உள்ள அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கடும் காயங்களுக்கு உள்ளான விநியோக பணியாளரான 40வயதுடைய சி.சிவக்குமார் என்பவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை உதயன் நாளேட்டின் விநியோக பணியாளர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில் அவர் தப்பிச் சென்றுள்ளார்.

இராணுவ, பொலிஸ் பாதுகாப்புகள் உள்ள இடத்தில் சம்பவம் இடம்பெற்றமை ஊடக சுதந்திரம் ஊடக ஜனநாயகம் தொடர்பாக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது கடந்த மாதம் வல்வெட்டித்துறை மாலுச் சந்தியில் வைத்து உதயன் நாளேடுகள் இனம்தெரியாத நபர்களினால் எரிக்கக்பட்டதுடன் விநியோக பணியாளரும் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு எமது ஒன்றியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனாலும் இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யபடவுமில்லை விசாரணைகள் நடைபெறவும் இல்லை. அந்த விசாரணை உரிய முறையில் இடம்பெற்றிருந்தால் தினக்குரல் நாளேடு எரிக்கப்பட்டதை தடுத்திருக்கலாம். ஊடகத்துறை மீது தாக்குதல் நடத்தும் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளிக்கப்படுவதால் இவ்வாறான வன்முறைகள் தொடருகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு யார் காரணம் என்று ஒன்றியம்; கேள்வி எழுப்பியுள்ளது

இவ்வாறான சந்தேகங்களை நீக்க நேர்மையான முறையில் செயற்பட்டு அரசாங்கம்; நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவ்வாறான வன்முறை சம்பவங்கள் ஊடகத்துறையின் சுதந்திரத்துக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்கும் பாரிய எச்சரிக்கையாக அமைந்து விடும். போர் முடிவடைந்து ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்று அரசாங்கம் கூறுவது உண்மையானால் அதனை ஊடக சுதந்திரமும் ஊடக ஜனநாயகமும் நிரூபிக்க வேண்டும். ஆனால் அந்த இரண்டும் தொடர்ந்து அடக்குமறைக்கு உள்ளாவதுடன் ஆரோக்கியமான அரசியல் சூழலும் கருத்தாடலும் தமிழர் பிரதேசங்களில் இல்லை என்பதையே பறைசாற்றுகின்றது.

இப்படிக்கு

அ.நிக்ஸன்

செயலாளர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக