இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்களும் பங்கேற்போம் என அச்சங்கத்தின் தலைவர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராதிகா சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு நிச்சயமாக ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. மனிதாபிமானத்தோடு நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில், தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும் கலந்து கொள்கிறது. ஈழத்தமிழர்களின் இன்னல் நீங்கிட, அவர்களின் கண்ணீரை துடைத்திட ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று அனைத்து சின்னத்திரை தயாரிப்பாளர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு வேலைகளை நிறுத்தி வைத்து, உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராதிகா சரத்குமார் கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக