செவ்வாய், 19 மார்ச், 2013

அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு: சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை!

News Serviceஇலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில். அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. முன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை 18 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தார்.


அதில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதாக அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து பல்வேறு திருத்தங்களுடன் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது. போர்க்குற்றம் ‌தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும். எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை. இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி ,நல்லிணக்கம் முழுமையாக செயற்படவில்லை. மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும். இவ்வாறு அந்த வரைவுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் தமிழர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி. திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை மதியம் அல்லது வியாழக்கிழமை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்ற கருத்து நிலவி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக