செவ்வாய், 12 மார்ச், 2013

வட இலங்கையில் விசேட காணி அலுவலகங்கள் திறப்பு

போருக்குப் பிந்திய வட இலங்கையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள காணி பிரச்சினைகளுக்கு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய நகரங்களில் அரசாங்கத்தினால் விசேட காணி அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.இரண்டு நாள் விஜயமாக வடபகுதிக்குச் சென்றிருந்த காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இந்த அலுவலகங்களைத் திறந்து வைத்திருக்கின்றார். யாழ் மாவட்டத்தின் காணி பிரச்சினைகளை யாழ் காணி அலுவலகமும், கிளிநொசசி, முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி பிரச்சினைகளை கிளிநொச்சி காணி அலுவலகமும் கையாளும் வகையில் இந்த அலுவலகங்களுக்கென புதிய ஆளணியினரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தேவைக்கேற்ப பொதுமக்களுக்கும் மற்றும் அரச தேவைகளுக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் அந்தந்தப் பிரதேசங்களி;ன் பிரதேச செயலாளர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. எனினும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகத் திறக்கப்பட்டுள்ள விசேட அலுவலகங்களில் நியமிக்கப்படுகின்ற அதிகாரிகளுக்கு காணிகளை சுவீகரிக்கும் அதிகாரம் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் காலப்பகுதியில் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும், அதன் பின்னர் மீண்டும் காணி அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி பிரச்சினைகளுக்கு, இன மத பேதமின்றி தீர்வு காண்பதற்கு அரசாங்கம் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக