இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கின்ற திமுக ஏன் இன்னமும் ஆளும் அரசில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறது? என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. செளகத் ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் போது பேசிய செளகத் ராய்,
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை திமுக ஏற்கவில்லை. பின்னர் ஏன் ஆளும் அரசில் தொடர்ந்தும் திமுக அங்கம் வகித்துக் கொண்டிருக்கிறது? தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். அவர்கள் தமிழர்களைப் படுகொலை செய்தவர்கள்.
கண்ணை மூடிக் கொண்டு விடுதலைப் புலிகளை திமுக ஆதரிக்கக் கூடாது. வைகோ போல திமுகவும் செயல்படக் கூடாது என்றார். செளகத் ராயின் இந்தப் பேச்சுக்கு தமிழக எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர், இந்த விவாதத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. செளகான், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்தி அரசுக்கு இருக்கிறது என்றார்.
இதே கருத்தை ஐக்கிய ஜனதா தள எம்.பியும் வலியுறுத்தினார். இதேபோல் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவும், அண்டை நாடுகளுடனான பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும். அப்படி நடைபெறவில்லையெனில் இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜிவ் காந்தியை இலங்கை வீரர் ஒருவர் அடித்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக