ஞாயிறு, 3 மார்ச், 2013

ஐ.நாவில் அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாமல் இந்தியா தடுத்து நிறுத்தக்கூடும்..!

News Serviceஇலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்படாமல் கருத்தொருமைப்பாட்டைக் கொண்ட ஆவணமாக உள்ளீர்க்கப்படுவது இந்தியாவின் எதிர்பார்ப்பாக சில சமயம் இருக்கக்கூடும். இவ்வாறு சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தீர்மானத்தை இந்த வழியில் முன் நகர்த்தும் போது நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்காது. அல்லது தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டியும் இராது. ஆனால், இந்த விடயம் முற்று முழுதாக இலங்கையிடமே தங்கியுள்ளது. 2012 ல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போது உறுப்பு நாடுகளை ஆதரவளிக்குமாறு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. ஆனால், இந்த வருடம் வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கை முன்தள்ளி விடாது என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கோரும் முயற்சியில் ஈடுபடுவதற்கான சாத்தியப்பாடும் தென்படவில்லை.

2012 மார்ச்சில் கொழும்பு வீதிகளில் மேற்குலகுக்கு எதிராகவும் தீர்மானத்திற்கு எதிராகவும் பேரணிகள் இடம்பெற்றன. அரசாங்கம் அதிகளவுக்கு ஊடகவியலாளர்களையும் இராஜதந்திரிகள், அரசியல்வாதிகளையும் ஜெனீவாவுக்கு அனுப்பியிருந்தது. உள்நாட்டில் தேசியவாத சுவாலைகளை இவர்கள் யாவரும் எரியவிட்டிருந்தனர். ஆனால்,"எந்த நாடுகள் எம்முடன் அல்லது எந்த நாடுகள் எமக்கு எதிரானவை' என்று பார்க்கப்பட்ட தீர்மானம் தொடர்பான கடும் யுத்தம் தோல்வி கண்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நாடு தொடர்பாக இது எதிர்மறையான கவனத்தையே அதிகளவுக்கு உள்வாங்கியிருந்தது. உள்நாட்டிலும் அதிகளவுக்கு அரசியல் ரீதியான அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வருடத் தீர்மானம் தொடர்பாக அமைதியான பெறுபேறு கிட்டுவதற்கே இலங்கை முன்னுரிமை அளிக்கக்கூடும். எதிர்மறையானதாக இருந்தாலும் அமைதியான விளைவுக்கே முன்னுரிமை அளிக்கக்கூடும். இந்த வருடம் நவம்பரில் பொதுநலவாய உச்சி மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராகி வருகிறது. இந்த உச்சி மாநாடு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமா? என்பது தொடர்பான கேள்விகள் பொதுநலவாய அமைப்புக்குள்ளேயே எழுந்திருக்கின்றன. அவுஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இதற்கு எதிரான பிரசாரங்கள் அதிகளவுக்கு எழுந்த போது ஆரம்பகட்டத்திலேயே அவற்றை இல்லாமல் செய்து விடுவது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பாரிய வெற்றியாகவும் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதாகவும் அமையும்.

இதேவேளை தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டாலும் பெறுபேறு கடந்த வருடத்திலும் பார்க்க வித்தியாசத்தை ஏற்படுத்தமாட்டாது. 2012ல் தீர்மானத்தை ஆதரித்திருந்த இந்தியா உட்பட நாடுகள் இந்தத் தடவை வித்தியாசமாகச் செயற்படுவதற்கான குறிப்பிடத்தக்க காரணத்தை இலங்கை வழங்கியிருக்கவில்லை. உண்மையில் மனித உரிமைகள் பேரவையின் உள்ளடக்கம் மாற்றம் அடைந்துள்ள நிலையில், தனது தரப்பில் குறைந்தளவிலான உறுப்பினர்களையே இலங்கை பார்க்க முடியும். ஏனெனில், சீனா உட்பட கடந்த வருடம் ஆதரவளித்த நாடுகள் சில இந்த வருடம் பேரவையில் இடம்பெறவில்லை. மறுபுறத்தில் வாக்கெடுப்பில்லாமல் தீர்மானம் உள்ளீர்க்கப்படுவதற்கு இடமளிப்பதென கொழும்பு தீர்மானித்தால் தீர்மானம் தொடர்பாக உறுப்பு நாடுகளுடன் செயற்படக்கூடியதாக அமையும். தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பாக செயற்படக்கூடியதாகவும் இருக்கும்.

கடந்த வருடம் இலங்கை இது தொடர்பாக செயற்பட்டிருக்கவில்லை. இந்தியா 2012 தீர்மானத்தின் கனதியைக் குறைப்பதற்கு செயற்பட்டிருந்தது. ஆனால், தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான உணர்வுகள் உச்ச மட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தத் தடவை அவ்வாறு செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. உத்தேச தீர்மானம் தொடர்பான சொல்லு நகல் வரைபு இந்துவுக்குக் கிடைத்திருக்கிறது. ஆயினும் இறுதியாகச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக தொடர்ச்சியாக பல திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இந்த வருட தீர்மானத்தின் மொழி உள்ளடக்கமானது கடுமையானதாகவும் அதிகளவுக்கு பரந்துபட்டதாகவும் அமைந்திருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அழைப்பு விடுப்பதாக 2012 மார்ச் ஆவணம் அமைந்திருந்தது. இந்த வருட நகல் வரைபானது இலங்கையின் தேசிய செயற்பாட்டுத் திட்டம் தொடர்பான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் யாவற்றையும் போதியளவில் உள்ளீர்க்கப்பட்டதாக செயற்பாட்டுத் திட்டம் அமைந்திருக்கவில்லையென்ற விடயத்தை புதிய நகல் வரைபு வெளிப்படுத்துகிறது. அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற ஏனைய விடயங்களை பரந்தளவில் கொண்டதாக இந்த நகல் வரைபு இருப்பது முக்கியமானதாகும். நீதித்துறை சுயாதீனம் மற்றும் சட்ட ஆட்சிக்கான அச்சுறுத்தல் தொடர்பான கவலைகளை நகல் வரைபு வெளிப்படுத்துகிறது. இந்த விடயம் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீதான சர்ச்சைக்குரிய குற்றப்பிரேரணையைக் குறிப்பிடுகின்றது என்பது தெளிவானதாகும். இந்த விடயமும் மாகாணங்களுக்கான அரசியல் அங்கீகாரத்திற்கான அதிகாரப்பகிர்வு உட்பட உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் தவறிவிட்டதைக் குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது.

வட மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் தாமதம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தீர்மானத்தின் அங்கமாக ஐ.நா. ஆணை கொண்ட விசேட அறிக்கையாளர்கள் தடையின்றி வருகை தருவதற்கான கோரிக்கைகளுக்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கும் விடயத்தையும் இது கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் சுதந்திரம், சித்திரவதை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனைகள், பலவந்தமாக அல்லது சுயவிருப்பில் காணாமல் போனோர் தொடர்பாக செயற்படும் குழு ஆகிய விடயங்களுக்கான விசேட அறிக்கையாளர்கள் இலங்கைக்கு தடையின்றி வருகை தருவதற்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டுமென்று கோருவதாகவும் உத்தேசத் தீர்மான நகல் வரைபு காணப்படுகிறது. அத்துடன், மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை உத்தேசத் தீர்மான நகல் வரைபு வரவேற்கிறது. தனக்குரிய அதிகாரத்தை மீறி நவநீதம்பிள்ளை செயற்படுவதாக ராஜபக்ச அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அவரின் அறிக்கைக்கு உத்தேச நகல் வரைபில் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக