வடக்கில் சிவில் ஆளுநர் நியமிக்கப்பட்ட பின்னரே வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டிற்கு இன்று (25) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் நீதியான, சுயாதீனமான வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னர் சிவில் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும். நீதியாக தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் ஐ.தே.கட்சியும் வட மாகாண சபை தேர்தல் களத்தில் களம் இறங்கவுள்ளது.
ஐ.தே.கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆலோசித்து வருகின்றோம். விரைவில் அறிவிப்போம். வடக்கிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளேன். வடக்கில் நடைபெறும் அபிவிருத்திகள் குறித்தும் மக்களின் தேவைகள் குறித்தும் மக்களைச் சந்தித்து வருகின்றேன்.
யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டதும் மதத் தலைவர்களைச் சந்தித்து பேசியுள்ளேன். சிவில் சமூகப் பிரதிநிதிகளையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனையும் மற்றும் உதயன் பத்திரிகை ஸ்தாபனத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளேன்.
ஐக்கிய தேசியக் கட்சி வட மாகாண சபைத் தேர்தலை எவ்விதம் எதிர்கொள்ளப் போகின்றது, அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதே வடக்கின் இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ரவி கருணா நயக்கா, சுவாமிநாதன், திஸ்ஸ அத்தநாயக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக