வெள்ளி, 26 ஏப்ரல், 2013

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை வேறு நாடு ஒன்றில் நடத்துமாறு கனேடிய பிரதமர் யோசனை

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை வேறு நாடு ஒன்றில் நடத்துமாறு  கனேடிய பிரதமர் யோசனைஎதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துக்கொள்ளும் உச்சி மாநாட்டை வேறு நாடு ஒன்றில் நடத்துமாறு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாபர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் தளர்வான நிலையில் இருப்பதாகவும் அதனை மேம்படுத்த தேவையான எந்த நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படாததன் காரணமாக உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்க போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ள பிரதமர், இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தாது வேறு நாடு ஒன்றில் நடத்துமாறு கோரி பல மாற்று யோசனைகளை முன்வைத்துள்ளதாக கனேடிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போப்ரே, நேற்று முன்தினம் கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, இலங்கையின் மனித உரிமை தொடர்பான அறிக்கை, நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவது குறித்து கவனத்தில் கொண்டு இலங்கையின் நிலைமை பற்றி ஏன் மீண்டும் மறுபரீசிலனை செய்யக் கூடாது என கேள்வி எழுப்பினார். அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடத்தப்படுவது பற்றி உறுப்பு நாடுகளை கனடா அழைத்து, அடுத்த இரண்டு வருடங்களுக்கான தலைமைத்துவத்தை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ஹாபர், தானும், நாடாளுமன்றத்தில் உள்ள பெருபாலான உறுப்பினர்களும் இலங்கை தொடர்பாக ஒரே தீர்மானத்தில் உள்ளதாகவும் இலங்கை பயணிக்கும் திசை தொடர்பில் கனடாவுக்கு பாரதூரமான பிரச்சினைகள் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், மாநாட்டை அங்கு நடத்துவது சிக்கலுக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்;வாறாயினும் கடந்த மாதம் இலங்கை சென்ற கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியு கீகல், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டிற்கு கனேடிய பிரதிநிதிகள் வருவார்கள் என தெரிவித்திருந்தார்.

எனினும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில், உறுப்பு நாடுகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியன தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காது போனால், அமைப்பின் எதிர்காலம் ஆபத்தானதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டதாக தி கனேடியன் பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

போர் முடிந்தவுடன் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது தொடர்பாக இலங்கை குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளில் நிலைப்பாடாக இருப்பதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக