யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணும் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான ஒத்திசைவாக்க அலுவலகத்தின் உயரதிகாரிகளான அக்னெஸ் அஸகென்பே மற்றும் மார்க் பிரளோபா ஆகியோருக்கு யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள நிலங்களை இராணுவம் பொறுப்பேற்பது தொடர்பான பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, சுயநல நோக்கம் கொண்ட சில தரப்பினர் இராணுவம் – பொதுமக்களின் காணிகளை பொறுப்பேற்பதாக கூறுவதாகவும் குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக காணிகள் பொறுப்பேற்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள கடற்தொழிலாளர்களை கரையோரப் பிரதேசங்களிலுள்ள அரசாங்க நிலங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் போராளிகளை சமுதாயத்தில் ஒன்றிணைப்பதற்கான திட்டங்களுக்கும் வறியோருக்கான வீடமைப்புத் திட்டம் போன்ற நலன்புரி வேலைகளுக்கும் இராணுவத்தினர் வழங்கும் பங்களிப்பு தொடர்பிலும் ஐ.நா அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனையடுத்து, கருத்து தெரிவித்த அவ்வதிகாரிகள், யுத்தம் முடிந்த பின்னரான யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக