'தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுபவர்கள் முடிந்தால் ஒரு பிரச்சினையையாவது சுட்டிக்காட்டட்டும். போருக்குப் பின்னர் வடபகுதியில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை. இதனை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன். எனது கூற்று தவறாயின், இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டவேண்டும். மாறாக, வீரவசனம் பேசுவதில் பயனில்லை' இவ்வாறு தமிழ்க் கூட்டமைப்புக்கு சவால் விடுத்துள்ளது அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய. வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர, அவர்களின் வாழ்வைக் கெடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களைக் கூட்டமைப்பு அதலபாதாளத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், 'தமிழ் மக்களுக்கு இங்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர்கள் சுதந்திரமாகவே வாழ்கின்றனர். அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தமிழர்களின் ஒத்துழைப்பு தான் தற்போது அவசியம்' என்று பதிலளித்தார்.
அப்படியாயின் இந்த நாட்டில் தமிழர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று கூறுகின்றீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'ஏதாவது பிரச்சினை இருந்தால் அவற்றில் ஒன்றையாவது கூறட்டும்' என எல்லா வெலதேரர் குறிப்பிட்டார். 'தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக் காட்டியுள்ளதே' எனத் தெரிவிக்கையில், இடைமறித்து கருத்துத் தெரிவித்த அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
கோயில்களை இடித்து விகாரைகள் கட்டப்படுகின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தைக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டுகையில் நான் மறுத்துரைத்து கருத்துத் தெரிவித்தேன்' என்றார். 'போருக்குப் பிறகு வடக்கில் புதிதாக விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. தற்போது மட்டக்களப்பிலும் இது குறித்து பிரச்சினைகள் எழுந்துள்ளனவே எனக் கேட்டபோது, 'போருக்குப் பின்னர் வடக்கிலோ, கிழக்கிலோ புதிதாக விகாரைகள் அமைக்கப்படவில்லை. நான் அப்பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்கிறேன்.
அப்படியொன்றும் அங்கு நடக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். முடிந்தால், கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும்' என்றார் எல்லாவெல தேரர். 'அதேவேளை, வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவம் சில நடவடிக்கைகளில் தலையிடுகின்றது. இதுகூட ஒரு பிரச்சினைதானே' என்ற வினாவுக்கு, 'தமிழ் மக்களுக்கு வடக்கிலுள்ள இராணுவம் ஒத்துழைப்பு வழங்குகின்றதே தவிர, இடையூறுகளை ஏற்படுத்தவில்லை.
இதை நான் நேரில் பார்வையிட்டுள்ளேன். வடக்கில் மட்டுமல்ல, ஏனைய பகுதிகளிலும் இராணுவம் இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன்' எனப் பதிலளித்தார். 'உங்களுடைய கட்சி இனவாதக் கட்சி என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இந்நிலையில், தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை. தீர்வு அவசியமில்லை எனக் கருத்து வெளியிடுகின்றார்கள். இது மேற்படி கருத்தை உறுதிப்படுத்துகின்றது அல்லவா?' 'இல்லை. ஜாதிக ஹெல உறு மய என்பது புலிகளுக்கு எதிரான கட்சி. எமது தமிழ்ச் சகோதரர்களுக்கு நாம் ஒருபோதும் துரோகமிழைத்ததில்லை. இது வரை நாம் தமிழர்களுக்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டையும் முன்வைக்கவில்லை. சில இனவாத சக்திகளே எம்மை இவ்வாறு சித்திரிக்க முயற்சிக்கின்றன' என்றார்.
'பிரச்சினைகள் இல்லை என நீங்கள் சொல்கின்றீர்கள். பிரச்சினைகள் இருப்பதால்தானே அவற்றைத் தீர்ப்பதற்காக அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்துள்ளது' என மீண்டும் எழுப்பப்பட்ட கேள்வி யொன்றுக்குப் பதிலளித்த எல்லாவெல தேரர், 'நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கமாகவே அது அமைக்கப்பட்டது. எனவே, அதற்கும் இதற்கும் முடிச்சுப் போடக்கூடாது. எமது தமிழ்ச் சகோதரர்கள் முன்னைய காலம் போன்று ஒற்றுமையாக வாழவேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு' என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக