புதன், 2 அக்டோபர், 2013

எமது ஆதரவு மனோவிற்கே-ஸ்ரீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைக்கு எதிரான பாதையில் இட்டுச் செல்லும் தேசிய பட்டியல் மூலம் கூட்டமைப்புக்குள் நுழைந்த சுமந்திரனுக்கு தமிழ்த் தேசியத்தின் பக்கம் இன்றுவரை உறுதியோடுள்ள சிறீதரன் தகுந்த பதிலடியை வழங்கியுள்ளார்.
இது தொடர்பான விபரம் வருமாறு,
எதிர்வரும் மேல்மாகாண சபைத்தேர்தலில் 'தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கும்' என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத்தேர்தலில் ஜன நாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன், ஊடகச் செயலாளர் பாஸ்கரா உட்பட பலரின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பிரசார பணிகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் நாம் மலையகம் சார் பிரதிநிதியை நியமிக்காத சந்தர்ப்பத்திலும் எமக்காக மூலை முடுக்கெல்லாம் தலைவர் மனோகணேசன் அவர்களும், ஊடகச் செயலாளர் பாஸ்கரா அவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். எங்கள் பெருவெற்றிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியவர்கள்.
நடைபெற இருக்கும் கொழும்பு உட்பட்ட மேல்மாகாண சபைத்தேர்தலில் தனித்து களம் இறங்கவுள்ள ஜன நாயக மக்கள் முன்னணிக்கு முழுமையான ஆதரவை அளிப்பது எமது தார்மீக கடமையாகும். தமிழ் மக்கள் அழிக்கப்படும் காலங்களில் எல்லாம் கொழும்பில் இருந்து எமக்காக குரல் கொடுத்த தலைவர் மனோகணேசனுக்கும் ஜன நாயக மக்கள் முன்னணிக்கும் கொழும்பு உட்பட்ட மேல் மாகாண தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை நிச்சயமாக வழங்குவார்கள் என்பதில் எமக்கு பூரண நம்பிக்கையுண்டு. மேலும் தமது முற்றுமுழுதான ஆதரவு ஜன நாயக மக்கள் முன்னணிக்கு என்றும் உண்டு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட்டமைப்பும் இத்தேர்தல் களத்தினில் குதிக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையினிலேயே சிறீதரனது இவ்வறிவிப்பும் வெளியாகியுள்ளது.
சிறீதரன் அவர்கள் காட்டமான பதிலை தற்போது வழங்கியிருப்பினும், இவரது குரல்வளை சுமந்திரன் சம்பந்தன் கூட்டமைப்பால் நசுக்கப்படக்கூடிய சூழல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக