வியாழன், 3 அக்டோபர், 2013

குழம்பியது கூட்டமைப்பின் கூட்டம்!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சரவைக்கான அமைச்சுக்கள் பங்கீடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தல் போன்ற விடயங்கள் கூட்டமைப்பின் தலைவர். இராசம்பந்தனும் தமிழரசுக்கட்சியினரும் விடாப்பிடியாக நடந்துகொண்டமையால் நேற்றைய கூட்டமும் தோல்வியில் முடிந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது
அமைச்சரவை கையிறுழுத்தல் தொடர்கிறது – 2 அமைச்சர்கள் தமிழரசுக் கட்சிக்கு ஏனைய 2 அமைச்சுப் பொறுப்புகளும் தவிசாளர் பொறுப்பும் 3 கட்சிகள் தமக்கிடையே பகிரவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உறுதியாக உள்ளமையை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படுத்தியருக்கின்றார்.
நேற்று கொழும்பில் கூடிய கூட்டம் நீண்ட இழுபறிகளின் பின் முடிவுற்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இறுதி முடிவு கொழும்பில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் முன் பதவிப்பிரமாணம் எடுத்தல் என்பதில் கூட்டமைப்பின் தலைமை விருப்பம் கொண்டுள்ளதாகவும் அது குறித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் தொடர்ந்ததாகவும் தெரிய வருகிறது.
நான்கு அமைச்சுக்களைப் பங்கீடு செய்யும் போது கல்வி, மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுக்கள் இரண்டையும் தமிழரசுக்கட்சிக்கு வழங்குமாறும் ஏனைய அமைச்சுக்கள் இரண்டை மூன்று கட்சிகளும் பகிர்ந்து கொள்ளுமாறும் தமிழரசுக்கட்சி வலியுறுத்தியதாகவும் கூட்டம் காரசாரமாக நடைபெற்றதாகவும் தெரியவருகின்றது. தமிழரசுக்கட்சி தமக்கு அமைச்சுப் பதவிகளை அதிகமாகக் கேட்பதற்கு தமது கட்சி பிரநிதிப்படுத்திய மாகாண சபை உறுப்பினர்களே அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டியதாக தெரியவருகின்றது. இருப்பினும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பங்கீட்டில் கூடிய பாகுபாடு காட்டப்பட்டு தமிழரசுகட்சி கூடுதல் வேட்பாளர்களை முன்னிறுத்தியதை கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் சுட்டிக்காட்டியதாகத் தெரியவருகின்றது.
நாளை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்ற போதிலும் மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவேண்டும் என்று சம்பந்தன் உறுதியாக உள்ளமையாலும் அமைச்சுப்பங்கீட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் குழப்பம் நீடிக்கும் சூழலே நிலவும் என்று எதிர்பார்க்க முடியும் என்கின்றார் கொழும்பில் உள்ள கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக